திருநெல்வேலி: கங்கைகொண்டானில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கங்கைகொண்டான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் உள்ள தேசியக்கொடி கம்பத்தில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சாதி கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ பரவியதைத் தொடர்ந்து, இதைக் கண்டித்து சில சாதி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் காவல்நிலையத்தில் இன்று (ஜன.23) புகார் அளித்தனர்.
அதேபோல், பள்ளியின் தலைமை ஆசிரியர் அலெக்ஸ் கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் பள்ளியில் சாதி கொடி ஏற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
முன்னதாக தேசியக்கொடி கம்பத்தை அவமதித்த நபர்களை உடனடியாக கைது செய்யும்படி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே கண்டன கோஷம் எழுப்பினர். மேலும், இதுகுறித்து இந்த இயக்கத்தின் மாநில செயலாளர் வள்ளி கண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், பள்ளியில் உள்ள தேசியக்கொடி கம்பத்தில் சாதி கொடியை ஏற்றிய நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களும் சாதியை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் தெரிவித்தார். எனவே, தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பணத்தில் ஆளுநர் தேவையற்ற விமானப் பயணம்? - ஆர்.டி.ஐ மூலம் பதில் கிடைக்காததால் சர்ச்சை!