திருநெல்வேலி: ஓய்வு பெற்ற மின்வாரிய ஓட்டுனர் அழகு ரத்தினம் (70) என்பவர் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் தியாகராஜ நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக அழகுரத்தினம் மாநகராட்சிக்கு 6 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார்.
ஆனாலும் மாநகராட்சி இவருக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதையடுத்து மீண்டும் 6 ஆயிரத்து 500 ரூபாய் கட்டியுள்ளார். இரண்டு முறை கட்டணம் செலுத்திய பின்பும், மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இரண்டு முறை மாநகராட்சிக்கு பணம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அழகு ரத்தினம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். இதற்காக முதலில் மாநகராட்சிக்கு 6 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். ஆனாலும் மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.
மீண்டும் 6 ஆயிரத்து 500 ரூபாய் கட்டினேன். ஆனால், இரண்டு முறை கட்டணம் செலுத்திய பின்பும், மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் இணைப்பு வழங்கும்படி உத்தரவிட வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு நெல்லை மாவட்ட நுகர்வோர் ஆணையத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "பாதிக்கப்பட்ட அழகு ரத்தினத்துக்கு கூடுதலாக செலுத்திய 6 ஆயிரத்து 500 ரூபாயையும், மன உளைச்சலுக்கு ஆளக்கப்பட்டதற்கு 15 ஆயிரமும், வழக்கு செலவுக்கு 3 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து வழங்க நெல்லை மாநகராட்சிக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் உத்தரவிட்டு பல மாதங்களாகியும் அழகுரத்தினத்திற்கு மாநகராட்சி இழப்பீடு வழங்கவில்லை. இதனால் மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளான அழகுரத்தினம் நீதிமன்றம் உத்தரவிட்டும் பலனில்லை என்று மீண்டும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் செலாற்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் ஆணையத் தலைவர் கிளாஸ்டன் பிளஸ்ட் தாகூர் மற்றும் ஆணைய உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் இன்று (நவ.7) நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேலப்பாளையம் உதவி ஆணையாளர் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். குடிநீர் இணைப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மாநகராட்சி அதிகாரிகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இது ஸ்வீட் இல்லை ஸ்வீட் மாதிரி.. தூத்துக்குடி பெண்ணின் அல்வா, குளோப் ஜாம் மெழுகுவர்த்திகள்.. தீபாவளி சிறப்புத் தொகுப்பு!