கன்னியாகுமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பொழிகிறது.
குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டிவிட்டன. பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்து ஏறத்தாழ 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல, ஆற்று பாதையான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைகுறிச்சி, விக்ரமசிங்கபுரம், காரைக்குறிச்சி, பத்தமடை, நெல்லை கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்டிருக்கும் இந்த பகுதிகளில் வெள்ளத்தில் நெல் பயிர்கள் மூழ்கி நாசமடைந்துள்ளன. பயிர்கள் அழுகியதால் செய்வது அறியாமல் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நிலங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மழை வெள்ள பாதிப்புகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். சேரன்மகாதேவி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணப்பட இயலாத இடங்களில் பறக்கும் கேமரா உதவியுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் அடிப்படையில், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அலுவலர்களுக்கும் மேற்கொள்ள வேண்டிய வெள்ள மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
இதையும் படிங்க : 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி - அரசாணை வெளியீடு