நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி சக பள்ளி மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் அவனது சகோதரி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாதி வன்மத்தால் மாணவன் தாக்கப்பட்ட இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. நாங்குநேரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.அதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் பலர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவனது தங்கையை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது மேலும் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரிகள் இது சம்பந்தமாக பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த விசாரணையின் அடிப்படையில் முதற்கட்டமாக பள்ளி கல்வி இயக்குனருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மாணவனுக்கு பள்ளியில் நடந்த சாதி கொடுமைகள் குறித்தும் சம்பவத்தன்று அவன் தாக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது தங்கை இருவரையும் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றவும் பரிந்துரை செய்து உள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாயாரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் மருத்துவர்களை சந்தித்து மாணவனுக்கு அளித்த சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். ராமநாதபுரத்தில் தொடங்கி அவரது நடை பயணம் விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) நெல்லை மாவட்டத்தில் அண்ணாமலை நடை பயணம் நடைபெற்றது. நெல்லை பாளையங்கோட்டையில் இன்று காலை அண்ணாமலையின் நடை பயணம் தொடங்கியது. இந்த நடை பயணத்தில் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதியும் படிங்க : நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் - தகர்ந்தது ரஷ்யாவின் கனவு!