திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளியைச் சேர்ந்தவர்கள், ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதி. இந்த நிலையில் ராஜேஸ்வரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ’எனது கணவர் ஐயப்பன், தீவிர அஜித் ரசிகர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்த சிவா என்பவர் தான், நடிகர் அஜித் ரசிகர் மன்றத் தலைவர் என்றும், அஜித்தின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்றும் எங்களிடம் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்குமார், கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டித் தர உள்ளார் எனக் கூறினார். இந்த வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும், அதன்பின் வீடு கட்டுவதற்கான தொகை ரூ.15 லட்சமும் பத்திரப்பதிவுக்கான தொகையும் சேர்த்து உங்களின் வங்கி கணக்கில் வந்து சேரும் என்றும் சிவா எங்களிடம் தெரிவித்தார்.
அதேநேரம் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாக சங்கர் என்னும் நபரை போலியாக தயார் செய்து, எனது கணவர் ஐயப்பனிடம் பேச வைத்தார். பின்னர் அவர் பணிபுரியும் இடத்திற்குச் சென்று 20 ரூபாய் போலி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் சிறிய தொகையாக ஏறத்தாழ ஒரு லட்சத்து 10,000 ரூபாய் வரை சிவாவிடம் கொடுத்துள்ளோம்.
சிறிது நாட்கள் கழித்து நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்தோம். எனவே, கொடுத்த பணத்தை சிவாவிடம் கேட்டதற்கு, ‘இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தார். எனவே எங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், நாங்கள் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.2 கோடி ஏல சீட்டு மோசடி: 7 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய தம்பதி.!