நெல்லை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சென்னை அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மோதல் விவகாரத்தில் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என ஒருதரப்பு குற்றம்சாட்டியது. எனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேற்று ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் நேரில் ஆஜராகாத காரணத்தால் ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று அதிரடியாக அறிவித்தது.
இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நேற்று இரவே அந்த இடைநீக்க உத்தரவை தமிழ்நாடு மாநில மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ரத்து செய்தார். இதையடுத்து நெல்லையில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் இரவோடு இரவாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்திக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் நன்றி. நேற்று நடந்த நிகழ்வுகள் மூலம் காங்கிரஸ் கட்சி பலமான இடத்தை நோக்கி நகர்வதாக கருதுகிறேன். எனது இக்கட்டான நிலையில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி. காங்கிரஸ் கட்சியை கோவிலாக கருதுகிறேன், நான் உயிருள்ள வரை காங்கிரஸ் கட்சியில் இருப்பேன்.
காங்கிரஸ் கட்சி என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். காங்கிரஸ் கட்சியில் இனிமேல் தவறு நடக்காது, இதுவரை நடந்ததை விட்டுவிடுவோம். 2024 ராகுல் காந்தி நடைப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாநில தலைமை கட்சியின் மேல் இடத்தில் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். மாநில தலைவர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்பது பொய் என நிரூபணமாகிவிட்டது. மாநில தலைமைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது, மாவட்ட தலைமைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. எனது கட்சியையும் தலைவர்களையும் உயிராக நேசிக்கிறேன், எந்த தலைவரையும் கலங்கத்திற்கு உட்படுத்த மாட்டேன். செல்வப்பெருந்தகைக்கும் சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிறப்பாக பணியாற்றிய செல்வப்பெருந்தகை மீது ஒருவிதமான பார்வை இருப்பதாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை - நெல்லை சோகம்!