திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் தேவர் ஜெயந்தி விழா இன்று (அக் 30) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு நெல்லை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களின் உடமைகளை சோதனையிட்டபோது, உள்ளே கைத்துப்பாக்கி இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையத்தின் புறக்காவல் நிலையத்தில் வைத்து இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (20) மற்றும் பால்துரை (24) என்பது தெரிய வந்துள்ளது.
இருவர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் கையில் துப்பாக்கியுடன் வலம் வர காரணம் என்ன? அல்லது ஏதேனும் சதி திட்டத்துடன் துப்பாக்கி எடுத்து வந்தார்களா? அல்லது துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வைத்துள்ளார்களா? என்பது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மெரினாவில் ஜெர்மன் ரக துப்பாக்கி கண்டெடுப்பு