நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் உள்ள பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்ளிட்ட 1,353 பேர்களைக் காண்பதற்கு அவர்களின் குடும்பத்தினர் அங்கு வந்து செல்கின்றனர். அதன்படி, இதற்கு சிறைவாசிகளை காண உரிய அனுமதியுடன் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அப்போது கைதிகளும், உறவினர்களும் சிறை வளாகத்திலுள்ள கம்பிகளுக்கிடையே 2 மீட்டர் இடைவேளியில் பேசி வருகின்றனர். வழக்கமாக, ஒரே நேரத்தில் பேசும்போது ஒருவருக்கொருவர் சத்தமாக பேசி வருவதோடு, ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ள இயலாத நிலை நிலவி வந்தது.
இதனைத் தவிர்க்கும் வகையில் சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் தெளிவாக பேசும் வகையில் மூன்றாவது போலீஸ் கமிஷன் பரிந்துரைப்படி நவீன முறையில் கண்ணாடி தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேர்காணல் அறை வடிவமைக்கப்பட்டு இன்டர்காமில் பேசும் வகையில் முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய சிறைகளில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் சிறைவாசிகளுடன் உறவினர்கள் தெளிவாக இடையூறு இன்றி பேசும் வகையில், நவீன நேர்காணல் அறை அமைக்கப்பட்டு இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை சிறைத்துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார். சிறைவாசிகள் உறவினர்களுடன் இன்டர்காமில் பேசினர். இதுவரை அவசர அவசரமாக கூட்டத்துக்கு இடையில் குரலை உயர்த்தி கஷ்டத்தோடு பேசிய உறவினர்கள் தற்போது எந்த பதற்றமும் இல்லாமல் இன்டர்காமில் கைதிகளுடன் நிம்மதியாக பேசி சென்றனர்.
இதுகுறித்து டிஐஜி பழனி கூறும்போது, 'தமிழகம் முழுவதும் சிறைச்சாலையில் நேர்காணல் அறைகள் நவீனப்படுத்தப்பட்டு சிறை வாசிகள் உறவினர்களுடன் இன்டர்காம் தொலைபேசியில் பேசும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இந்த வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்து இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு நேர்காணல் அறையில் ஒரே நேரத்தில் 26 பேர் பேசலாம். இந்த வசதி மூலம் சிறைவாசிகள் உறவினர்களிடம் தெளிவாக பேச முடியும்' என்றார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலக வசதி - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு