தமிழ்நாட்டில் வரும் திங்கள்கிழமை (மே.24) முதல் 30ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதாவது ஏற்கனவே சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவற்றை சரிவரப் பின்பற்றாமல் அலட்சியமாக சாலைகளில் சுற்றித் திரிவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஊரடங்கின்போது மளிகைக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என்று அரசு தெரிவிந்துள்ளது. இதற்கிடையில், வெளியூரில் தங்கி வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக இன்றும் (மே.22) நாளையும் (மே.23) மட்டும் அரசு, தனியார் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் தற்போது இயங்கத் தொடங்கின. முன்னதாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இங்கிருந்து ஓசூர், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
திருநெல்வேலியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் சுமார் 60 பேருந்துகள் இன்றும் நாளையும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் அதிக அளவு வெளியூர்வாசிகள் தங்கியிருப்பதால் திருநெல்வேலியில் இருந்து 15 பேருந்துகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போக்குவரத்துக் கழக அலுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!