திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு நேற்று (மே 11) இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. 60 பயணிகள் உடன் புறப்பட்ட இந்த பேருந்தை, தென்காசி மாவட்டம் அனந்தபுரத்தைச் சேர்ந்த கணேசன் (40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
பேருந்து நெல்லை டவுன் ஆர்ச்சை கடந்து அருணகிரி தியேட்டர் முன்பு பேருந்து சென்றபோது, ஓட்டுநர் கணேசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், ஓட்டுநர் கணேசன் சரியாக பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தி உள்ளார். ஆனால், அடுத்த நொடியே ஸ்டீரிங்கில் சாய்ந்து விழுந்துள்ளார். பின்னர் ஓட்டுநரை மீட்ட பயணிகள், அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுண் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்தை எடுத்துச் சென்றனர். மேலும், அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளை, வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தில் இருந்த 60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'இறந்துபோன உங்க அம்மா கூட பேசுறேன்'என ரூ.2 கோடி வரை சுருட்டிய கேரள போலி மந்திரவாதி கைது!