திருநெல்வேலி: வடகிழக்கு பருவ மழையின் ஒரு அங்கமாக, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றும் நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதிகளான நாலுமுக்குவில் 82 மில்லி மீட்டர் மழையும், ஊத்து பகுதியில் 77 மில்லி மீட்டர் மழையும், காக்காச்சியில் 66 மில்லி மீட்டர் மழையும், பாபநாசத்தில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மலைப் பகுதிகளில் நீடித்து வரும் கனமழையால், அதனை சார்ந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளுக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு, தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 538 கன அடி நீர்வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு, வினாடிக்கு 1,520 கன அடி தண்ணீர் வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளவை எட்டி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கடந்த மாதம் பல லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால், வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது வரை மலைப்பகுதிகளில் நீடித்து வரும் மழையால், அணைகளில் இருந்து அதிகப்படியான உபர் நீர் திறக்கப்படுகிறது.
அதன்படி, பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,520 கன அடி தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இது தவிர, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், மழை நீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் சேர்ந்து சுமார் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்கிறது. இதனால் மீண்டும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக, இன்று காலை முதல் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால், மக்கள் பலர் உடைமைகளை இழந்து பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்ற நிலையில், மீண்டும் நெல்லையில் மழை நீடித்து வருவதால், தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சார்மினார் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து - 5 பேர் காயம்!