நெல்லை டவுன் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (33). இவர் வேன் ஓட்டுநராக உள்ளார். இவரது வேனில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்று பள்ளிகளில் விடும் பணி செய்து வந்தார்.
அதன்படி, தச்சநல்லூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கும் 5 வயது சிறுமியையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். வழக்கம்போல் கடந்த 2016 ஆண்டு ஜூன் 08ஆம் தேதி அன்று சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்றவர் மற்ற குழந்தைகளை இறக்கிவிட்டு, இந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவரவே, டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநர் பெருமாளை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 31 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டு நிறைவடைந்த நிலையில், குற்றவாளிக்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சாகும் வரை, அதாவது இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி இந்திராணி தீர்ப்பு அளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அபராதத் தொகையுடன் சேர்த்து அரசு தரப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் என மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் குழந்தையின் காப்பாளர் பெயரில் வங்கியில் செலுத்த உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பெருமாள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:நதிகள், ஊர்களுக்கு எல்லாம் பெண்கள் பெயர்... இந்தியாவில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: தீர்வு என்ன?