திருநெல்வேலி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தினை ஒன்றிய அரசின் "கேலோ இந்தியா" திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தக் கோரிக்கையை அடுத்து தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசின் ''கேலோ இந்தியா'' திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தமிழினத்திற்குக் கிடைத்த பெருமை என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்திருந்தார்.
3 விழுக்காடு இட ஒதுக்கீடு
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் சிலம்பாட்டக் கழகம் சார்பில், தமிழரின் வீர விளையாட்டான சிலம்பக் கலைக்கு, விளையாட்டுத்துறையில் முன்னுரிமை அளித்து 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.
திருநெல்வேலி மாவட்டம், வ.உ.சி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிலம்பப்போட்டியில் 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கரோனா பேரிடர் காரணமாக, நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 13 வகையான விளையாட்டுகளை விளையாடினர்.
சிலம்பம் மட்டுமின்றி வாள் வீச்சு, சுருள் வாள், மான் கொம்பு, வேல் கம்பு சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் இந்திய அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க முயற்சி
இதுகுறித்து திருநெல்வேலி அமெச்சூர் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் கூறியதாவது, "விளையாட்டுத் துறையில் சிலம்பக்கலைக்கு இடஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
மேலும் இப்போட்டியை மென்மேலும் வளரச் செய்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்குண்டான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதையடுத்து போட்டியில் பங்கேற்ற மாணவி கார்த்திகா கூறியதாவது, ''தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பானது தங்களைப் போன்ற கிராமப்புற மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிலம்பத்திற்கு அங்கீகாரம்; தமிழினத்திற்கு பெருமை - நிறைவேறிய முதலமைச்சரின் முயற்சி