திருநெல்வேலி: நெல்லையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர இடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி சிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் 313 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் இடங்களும் 92 மாணவர்களுக்கு பல் மருத்துவப் படிப்பிற்கான இடங்களும் என மொத்தம் 405 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியை நிலைநாட்டி உள்ளார்.
மேலும், கவுன்சிலிங்கில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசே கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த 7.5விழுக்காடு இட ஒதுக்கீடு சாதனையின் முழு கதாநாயகன் முதலமைச்சர் மட்டும்தான். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கம்போல் அறிக்கை மூலம் அந்த சாதனைக்கு சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்.
யானை என்பது மிகப்பெரியது 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது யானையைப் போன்றது. அதற்கு அங்குசம் வாங்க நாங்கள் தான் ஆலோசனை கொடுத்தோம் என ஸ்டாலின் சொல்வது நகைப்புக்குரியது. யானையும் நாங்கள்தான் வாங்கினோம். அங்குசமும் நாங்கள்தான் வாங்கி கொடுத்தோம். இந்த சிந்தனை யாருக்கு வந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொது மேடையிலும், சட்டப்பேரவையில் யாருமே கோரிக்கை வைக்காத போதிலும் முதலமைச்சர் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார். நடுநிலையாளர்களே இது சமூக நீதி காக்கும் சிந்தனை என பாராட்டுகின்றனர். இதில், சொந்தம் கொண்டாட வழக்கம்போல் திமுக தலைவர் அறிக்கை மூலம் முயற்சி செய்கிறார்.அது பலிக்காது இந்த சாதனையை யாராலும் மறுக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க: சமூக நீதி ஜெயிக்கும் வரலாறு - 'நீட்' தேர்வில் வென்ற சாமானிய மாணவியின் கதை!