திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் நெல்லைக்கு வருகை தந்திருந்தார்.
பின்னர், பாஜக தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " திமுக ஒரு குடும்ப கட்சி. அந்த கட்சி ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் ரவுடியிசம், ஊழல் உள்ளிட்ட செயல்கள் நடந்தன. திமுகவின் தேர்தல் அறிக்கை மத்திய அரசின் திட்டங்களை நகலெடுத்ததைப்போல உள்ளது. மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு வேளாண் மக்களுக்கு இணையாக மீனவர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 2021 இறுதியில் குடிசைகளே இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியைப் பிரதமர் மோடி செய்துவருகிறார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகுதியில் தற்போது உள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினரைக் காணவில்லை என சுவரொட்டி எல்லாம் ஒட்டப்பட்டது. இந்நிலையை மாற்ற வேண்டும். திமுகவிலிருந்து பலர் பாஜகவில் இணைகின்றனர். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகளை ஜி.எஸ்.டி வரிக்கு கீழ் கொண்டுவந்தால் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றன. இருப்பினும் 2014இல் 1440 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது ₹700ஆக உள்ளது.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. அகில இந்திய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. நிலையான ஆட்சி தமிழ்நாட்டிற்குத் தேவைப்படுவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். பாஜக வேட்பாளர் பட்டியலை மாநில, தேசிய நிர்வாகிகள் ஆலோசனை செய்து வெளியிடுவோம். ஒரு சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் எல்இடி வாகனம்: அப்டேட் ஆன ரத்தத்தின் ரத்தங்கள்!