திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே உள்ள பசுக்கிடைவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் பாபநாசம் காரையார் பகுதியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக நெல்லை புதிய பேருந்து நிலையம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பாபநாசம் காரையாரில் இருந்து நெல்லை நோக்கி தனியார் பேருந்தை மகேஷ் இயக்கி கொண்டிருந்தார். பேருந்து அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென ஓட்டுநர் மகேஷை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் மகேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பாசமுத்திரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோவில்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற ஒயிட் மணி என்பவர் தான் மகேஷை வெட்டியதாக தெரியவந்த நிலையில் ஒயிட் மணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், மணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது எனவும் அதன் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் போலீசார் தரப்பு கூறுகின்றனர். இந்த நிலையில் சுப்பிரமணி என்ற ஒயிட் மணி பேருந்துக்குள் புகுந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டுவது, அதனை ஓட்டுநர் தடுத்து அந்த நபரை லாவகமாக பிடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
தற்போது அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக, அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை ஒருவர் பேருந்துக்குள் புகுந்து ஓட்டுநரின் முகத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து அடுத்தடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் பேருந்து ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டும் சம்பவம் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!