சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடும், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காமல் அலட்சியம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டப்படி பதிவு செய்ய கூடுதலாக 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். மருத்துவர்களின் பதிவை புதுப்பிப்பதற்காக நடைமுறைப் படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும்.
பொது சுகாதாரத்துறையின் இலவச மருத்துவ சேவையை ஒழிக்கும் நோக்குடன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் கண்டிக்கத்தக்கது. பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்காமல், நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரத்தப் பரிசோதனை நிலையங்களை தொடங்க வேண்டும்", என்று தெரிவித்தார்.