திருநெல்வேலி: 16 மாதக் குழந்தை ஒன்று 30 உலகத் தலைவர்களின் பெயர்களை மனப்பாடமாகக் கூறுவதுடன், மிகச்சிறிய வயதில் ஏழு விருதுகளை வாங்கிக் குவித்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, டெரன்ஸ்-ரெபேகா தம்பதியின் குழந்தை சகாய காஸ்ட்ரோ. டெரன்ஸ் மர வியாபாரம் செய்து வருகிறார். குழந்தை சகாய காஸ்ட்ரோவுக்கு தற்போது ஒன்றே கால் வயது (16 மாதங்கள்).
திகைக்க வைத்த நினைவாற்றல்
இச்சூழலில், பிறந்து ஆறு மாதங்களிலேயே தனது நினைவாற்றலை வெளிப்படுத்திய காஸ்ட்ரோவின் திறமை அவரது பெற்றோரை திகைக்க வைத்துள்ளது. வீட்டில் சாதாரணமாக கணவன்-மனைவி பேசிக் கொண்டிருந்தபோது அதைக் கூர்மையாக கவனித்து வந்த சகாய காஸ்ட்ரோ, மறுநாள் அவர்கள் பேசியதைக் கூறி தனது பெற்றோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதையடுத்து குழந்தையின் இந்தத் திறமையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அன்று தொடங்கி டெரன்ஸ், ரெபேகா இருவரும் சேர்ந்து சகாய காஸ்ட்ரோவுக்கு பல்வேறு புதுப்புது விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளனர்.

உலகத் தலைவர்களின் பெயர்கள் மனப்பாடம்
அந்த வகையில் உலகத் தலைவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து அவர்களின் பெயர்களை கற்றுக் கொடுத்துள்ளனர். இதை நன்கு கவனித்து கற்றுத் தேர்ந்த சகாய காஸ்ட்ரோ, தற்போது தலைவர்களின் புகைப்படங்களை காண்பித்தால் அவர்களின் பெயர்களை மனப்பாடமாகக் கூறி அசத்துகிறார்.
ஸ்டாலின் முதல் ட்ரம்ப் வரை...
குறிப்பாக ஸ்டாலின், டிடிவி தினகரன், மம்தா பானர்ஜியில் தொடங்கி, பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் புகைப்படங்களையும் பார்த்து அவர்களின் பெயர்களை தனது மழலை மொழியில் சகாய காஸ்ட்ரோ கூறுகிறார்.

பிறந்த 16 மாதங்களில் 7 விருதுகள்
இக்குழந்தையின் திறமைக்கு மகுடம் சூட்டும் வகையில் ’இந்தியன் புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு’, ’இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு’, ’கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு’ உள்ளிட்ட ஏழு விருது நிறுவனங்கள் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன. மிகச்சிறிய வயதில் ஏழு விருதுகளைப் பெற்று காஸ்ட்ரோ பெற்றிருப்பது அப்பகுதி மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல் மிகச்சிறிய வயதில் ஏழு விருதுகளைப் பெற்றிருப்பதால் இந்தியன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு குழந்தை சகாய காஸ்ட்ரோவுக்கு 'இந்தியன் கிட் ஆப் தி இயர் 2021’ ( Indian Kid Of The Year 2021) என்ற விருதையும் கொடுத்து சிறப்பித்துள்ளது. உலகத் தலைவர்கள் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்கினங்கள், பழங்கள் போன்றவற்றின் பெயர்களையும், அவற்றின் புகைப்படங்களைப் பார்த்து துல்லியமாகக் கூறுகிறார்.
பெருமை தெரிவிக்கும் பெற்றோர்
கள்ளம், கபடம் இல்லாத சிரிப்புடன் வலம் வரும் மழலைப் பருவத்தில், குழந்தை சகாய காஸ்ட்ரோ இத்தகைய தனித்திறமையுடன் விளங்கி வருவது தங்களுக்கு பெருமையாக இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை டெரன்ஸ் நம்மிடம் கூறுகையில், ”எனது குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆனபோதே அவனுக்கு அதிக நினைவாற்றல் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு விஷயங்களை அவனுக்கு கற்றுக் கொடுத்தோம்.
தற்போது உலகத் தலைவர்களின் பெயர்கள், பழங்கள், பறவைகள் போன்றவற்றின் பெயர்களை புகைப்படங்களைப் பார்த்து கூறுகிறார். எனது குழந்தைக்கு இதுவரை ஏழு விருதுகள் கிடைத்துள்ளன. இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது” என்றார்.
உதவும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை
தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா போன்று அனைவரின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதால் தான் தனது மகனுக்கு இதுபோன்ற நினைவாற்றல் ஏற்பட்டதாக குழந்தையின் தாய் ரெபேகா பெருமிதம் தெரிவிக்கிறார்.
இது குறித்து குழந்தையின் பேசிய அவர், ”எனது மகனுக்கு சிறுவயதிலேயே அதிக நினைவாற்றல் இருப்பது பெருமையாக இருக்கிறது. அவனது திறமையை மேலும் வளர்க்க வேண்டும் என்பதற்காக உலகத் தலைவர்களின் பெயர்களை கற்றுக் கொடுத்தோம்.
எனது மகன் டிவி பார்ப்பதைவிட எங்களது உறவினர்களான சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி என அனைவரிடமும் நன்கு பழகுவான். அதன் காரணமாகவே அவனுக்கு நினைவாற்றல் ஏற்பட்டுள்ளது.
குழந்தை மேதைக்கு பெயர் பரிந்துரை
வளர்ந்த பிறகு அவன் என்ன ஆக வேண்டும் என்று நாங்கள் எதுவும் திட்டமிடவில்லை. அவனுக்கு எது பிடிக்குமோ அதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் மேலும் தற்போது உலகின் தலைசிறந்த 100 குழந்தை மேதைகளுக்கான விருதுக்கு எனது மகன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மேலும் பெருமையாக உள்ளது” என்றார்.
தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சாதனை படைக்க வேண்டும் என்பது அனைத்து பெற்றோருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான எதிர்பார்ப்புதான். ஆனால் இந்த எதிர்பார்ப்பை குழந்தை சகாய காஸ்ட்ரோ தனது 16 மாதங்களிலேயே பூர்த்தி செய்துள்ளது வியப்பின் உச்சமே!
இதையும் படிங்க: நெட்வொர்க் இல்லை... ஆன்லைன் தேர்வெழுத நடந்தே சென்ற பழங்குடியின மாணவி