தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விசாகன் (35) மற்றும் சரவணன்(29). விசாகனுக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஏற்கெனவே விவாகரத்து பெற்று தனியே வசித்து வந்தார். விசாகன், சரவணன் ஆகிய இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று(அக்.14) காலை அப்பகுதியில் உள்ள கறிக்கடை முன்பாக பேசிக்கொண்டிருந்த சரவணனுடன், விசாகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விசாகனின் மார்பு, முதுகுப்பகுதியில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதில் படுகாயம் அடைந்த விசாகனை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விசாகன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகுளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய சரவணனை தேடிவருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:13 வயது சிறுமிக்கு திருமணம்: சரியான நேரத்தில் தடுத்து நிறுத்திய சமூக நலத்துறை!