தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் காவல் நிலையத்தில் விதிமீறல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் உள்பட, ஏராளமான வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளதாக காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இவ்வாறு, காவல் நிலைய வளாகத்திலேயே இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கண்டமனூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே ஊரை சேர்ந்த செல்வக்குமார், முத்துராஜ் ஆகியோர் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மூன்று இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்துள்ளது.
இருவரும் காவல்துறையினர் இல்லாத இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு பின்பக்கமாக வந்து, இருசக்கர வாகனங்களை சுற்றுச்சுவர் மேல் தூக்கி, மறுபக்கம் கொண்டு சென்று திருடியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!