காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வெளியிட்ட கேலிச்சித்திரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, இன்று மாலை போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போடி வள்ளுவர் சிலை முன்பாக கூடிய காங்கிரஸ் கட்சியினர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் குருமூர்த்தியின் உருவபொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரிக்க முயன்றனர். அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்மையை எடுத்துச் சென்றனர். பின்னர் குருமூர்த்தியின் உருவப்படத்தை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.