தென்காசி: தென் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளத்தின் தீவிரம் குறையாமல் இருப்பதால் இன்றும் (டிச.18) அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டு, ஆற்றங்கரை அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்றும் ஆற்றுப்படுகைகளில் வசிப்போர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று (டிச.17) கனமழை மழை தொடங்கியது. இதனால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
மேலும், குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் காற்றாற்று வெள்ளம் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால் மீட்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் இங்குள்ள யானை பாலம் நிரம்பியுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி யானை பாலத்தில் குளிக்க கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், முன்னேற்பாடாக அப்பகுதியில் பேரிகாடு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருகபக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் கனமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் இரவிச்சந்திரன் இ.ஆ.ப, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நெல்லையை மிரட்டும் கனமழை.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மாநகரம்.. அத்தியாவசிய பொருட்கள் மதுரையிலிருந்து வரவழைக்க ஏற்பாடு..