தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி. கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிக்கண்ணன். இவர், தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ராஜி(22) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது பிரசவத்திற்காக ராஜி கடந்த ஜூலை 17ஆம் தேதி அதிகாலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினமே அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அவர் ஜூலை 20ஆம் தேதி கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்ததாக மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாண்டி கண்ணன் இன்று(ஜூலை 27) மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து பாண்டி கண்ணன் கூறுகையில், "பிரசவத்திற்கு முன்னதாகவே எனது மனைவிக்கு மேற்கொண்ட சோதனையில் கரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. சுகப்பிரசவம் ஆன மூன்று நாள்கள் நலமுடன் இருந்த எனது மனைவியை பரிசோதனை செய்து கரோனா தொற்று இருப்பதாக கூறி தனிமைப்படுத்தி யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.
எனது மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யவேண்டும் என மூன்று ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டனர். ஆனால், எந்தப் பரிசோதனையும் எங்களுக்கு செய்யப்படவில்லை.
அதன் பின்னர் ஜூலை 20ஆம் தேதி எனது மனைவி இறந்துவிட்டதாக கூறி சடலத்தை 21ஆம் தேதி கொடுத்தனர். ஆனாலும், கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்வதற்கான வழிமுறைகளின் படி அடக்கம் செய்ய யாரும் அறிவுரை கூறாததால் நாங்களாகவே பெரியகுளம் மின்மயானத்தில் தகனம் செய்துவிட்டோம்.
மேலும், எங்கள் குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்யவில்லை. இதனால், எனது மனைவி உண்மையிலேயே கரோனாவால்தான் உயிரிழந்தாரா என்று சந்தேகம் எழுகிறது. எனது மனைவியின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை செய்து தவறான சிகிச்சையளித்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுபோல் வேறு யாருக்கும் நிகழக்கூடாது" என்று தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மருத்துவமனை முதல்வர் இளங்கோவனிடம் கேட்டபோது, பரிசோதனைக்காக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணம் கொடுத்தற்கான ஆதாரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும்.
அதைவிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்வதற்கான வழிமுறைகள், தொடர்பில் இருந்தவர்களிடம் பரிசோதனை ஆகியவைகள் வருவாய், சுகாதாரத் துறையினர் தான் செய்யவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'நாலு வருஷமா ஒருபோகம்.. இந்த வருஷம் அதுவும் இல்ல' முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் கவலை!