தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சுரங்கனாறு அருவி. தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அருவி அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்த அருவியில் இருந்து விழும் நீரானது வாய்க்கால் மூலமாக கொண்டு வரப்பட்டு கூடலூர் பகுதியில் அமைந்துள்ள ஒட்டான்குளத்தில் தேக்கப்பட்டுவந்தது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.
இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் வரும் வாய்க்கால் பாதையில் அடைப்பு ஏற்பட்டு குளத்திற்கு தண்ணீர் வந்து சேராமல் முல்லைப் பெரியாற்றில் கலந்தது.
மேலும், உடைப்பு ஏற்பட்ட இடமானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அதை சரிசெய்யவதில் சிக்கல் இருந்து வந்தது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதையை சரிசெய்து தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வின் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக ஆய்வு செய்த அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீணாகக் கடலில் கலக்கும் ஆற்றுநீர்; பொதுமக்கள் வேதனை!