தேனி: கூடலூர் அருகே தமிழ்நாடு - கேரளா மாநில எல்லையில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வருகிற மே 5ஆம் தேதி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு திருவிழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, தேனி மாவட்டத்திற்கு வருகிற மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிவித்துள்ளார். அதேநேரம், இந்த திருவிழாவிற்காக கூடலூர் லோயர் கேம்ப் அருகே உள்ள பளியன்குடியில், கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சார்பில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், சித்திரை முழு நிலவு திருவிழாவிற்கு வருகை தரும் தமிழ்நாடு - கேரள மாநில பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை நடத்தினர். அதேபோல், இந்த ஆண்டு பிரசித்திபெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற மே 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக கௌமாரியம்மன் திருக்கோயிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற மே 12ஆம் தேதி நடைபெற உள்ளதால், தேனி மாவட்டத்திற்கு 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சித்திரை திருவிழா: வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளிய மீனாட்சி