தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேனி மக்களவைத் தொகுதிக்கு 30 வேட்பாளர்கள், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 16 வேட்பாளர்கள், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 13 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகள் என மொத்தம் 1,218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 209 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல்துறை, தேனி மாவட்ட காவல் துறை, ஆயுத படை, ஊர்க்காவல் படை, முன்னாள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் மீது 46 வழக்குகளும், திமுக மீது 52, அமமுக மீது 17, நாம் தமிழர் கட்சியினர் மீது 1, இதரர் மற்றும் சுயேட்சைகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 34 வழக்குகள் பணம் விநியோகம் குறித்து வந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.60 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை ஆறு மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இச்சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.