தேனி: வேளாண் பொறியியல் துறையின் சார்பாக, வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய பவர் டில்லர்கள், நிலத்தை உழவு செய்யும் கருவிகள், நிலத்தை ஆழப்படுத்தும் கருவிகள் என மொத்தம் 33 வேளாண் கருவிகள் 18 லட்ச ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் பெரும்பாலும் சேதமடைந்தும், வாகனத்தை இயக்கும் போது பழைய வாகனம் போல் இன்ஜினில் இருந்து கரும்பு புகை வெளிவரும் நிலையிலும், துருப்பிடித்து, பல வாகன சக்கரங்கள் சேதமடைந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புத்தம் புதியதாக வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் வாங்கிய விவசாயிகள், கடைசியில் மானிய விலைக்கு வழங்கப்படுகிறது என்பதற்காக இப்படி சேதம் அடைந்த வாகனங்களை வழங்குவதா? என மனவேதனை அடைந்தனர். மேலும், தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களில் உள்ள சேதங்கள் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணில் படவில்லையா என விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்ட ஈடிவி பாரத் செய்தியாளர், மாவட்ட ஆட்சியர் ஆ.வி.சஜீவனாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, "விவசாய வாகனங்கள் சேதம் அடைந்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.