தேனி: லோயர் கேம்பில் இருந்து பழனி செட்டி பட்டி வரை உள்ள 14 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு பகுதி வரை ‘கம்பம் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறும் விவசாயத்திற்கு முல்லை பெரியாறு அணை மட்டுமே நீர் ஆதாரமாக விளங்குகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளுக்கும் மற்றும் தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும் நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியில் அமைந்து உள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும், விவசாய நிலங்களின் பாசன வசதிக்கும் நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டுப் பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரேஷன் அரிசியை விற்றால் ரேஷன் கார்டு கட்.. ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு!
இதன் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேலும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 அடி கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மொத்தம் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 300 கன அடி விதம் திறக்கப்பட உள்ளது. நாளை முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது.
மேலும், முல்லைப் பெரியாறு அணையில் நீரின் இருப்பு அளவை பொறுத்தும், நீர் வரத்தைப் பொறுத்தும் தண்ணீர் திறந்து விடும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. இந்த நீர் திறப்பின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தம பாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கரும், போடி வட்டத்தில் 488 ஏக்கரும், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இரு போக நெல் சாகுபடி விவசாயம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, முதல் போக சாகுபடிக்கான நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்
இதையும் படிங்க: எல்லா கல்லூரிக்கும் ஒரே நாளில் தேர்வு - அமைச்சர் பொன்முடி புதுத் திட்டம்!