தேனி: உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் மாலை அணிந்து கோயிலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில் ஏராளமானோர் தேனி மாவட்டம் கம்பம், குமுளி வழியாக கோயிலுக்குச் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, இன்று (டிச.23) முதல் பிற மாவட்டங்களில் இருந்து தேனி வழியாக சபரிமலைக்குச் செல்லும் வாகனங்களை கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி வழியாக செல்லும் விதமாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சபரிமலையில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பும் வாகனங்கள் முண்டக்கயம், குட்டிக்கானம், வண்டிப்பெரியாறு, குமுளி, கம்பம் வழியாக தேனிக்கு செல்லுமாறும் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர். மேலும் போக்குவரத்து மாற்றுப்பாதையில் செல்வதை கண்காணிக்கவும், பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் கம்பம் ஏஎஸ்பி மதுக்குமாரி மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில், உத்தமபாளையம் காவல்துறை துணை கோட்டத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சபரிமலையில் இதுவரை 24 பேர் உயிரிழப்பு - ஆய்வுக்குழு முடிவு என்ன?