தேனி: இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். இந்தப் பூவின் வாசம் அதைசுற்றியுள்ள பகுதியை நறுமணத்துடன் வைத்திருக்கும். இவை ஒருவகை கள்ளி வகையைச் சேர்ந்தவையாகும். ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். பிரம்மாவிற்கு உகந்த பூவாக கருதப்படுவதால் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்த பூ உத்ரகாண்ட், இமயமலை அடிவாரங்களில் அதிகம் காணப்படும். தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் காணப்படுகிறது.
அந்த வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மணி என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இந்த பிரம்ம கமலம் பூ செடியை ஒரு வருடமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 5-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளன. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் பூக்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பிரம்ம கமலம் பூக்களை அதிசயமாக பார்த்து சென்றனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் மலர்ந்து குலுங்கும் பிரம்ம கமலம் பூ