தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ளது சுருளி அருவி. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த இடமாகத்திகழும் இந்த அருவி சிறந்த சுற்றுலா மற்றும் புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.
சுற்றுலாப் பயணிகள் வருகை
இதனால், தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு தினசரி வந்து செல்வதுண்டு. இது தவிர ஆடி, தை, அம்மாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாள்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் சுருளி அருவிக்கு வருகைத் தருவதுண்டு.
தடைவிதிப்பு
இந்நிலையில், கரோனா தொற்று பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் சுருளி அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடியது.
தடையை நீக்க கோரிக்கை
ஊரடங்கு தளர்வு ஏற்படுத்திய பிறகும், சுருளி அருவிக்கான தடை தொடர்ந்து நீடித்து வந்தது. குறிப்பாக குற்றாலம் போன்ற அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளதைப் போன்று தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலான சுருளி அருவியையும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "சுற்றுலா தளங்களுக்கான தடை நீட்டிப்பால், கடந்த 8 மாதங்களாக வீட்டிற்குள் அடைப்பட்டு கிடக்கிறோம். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற விஷேச நாள்கள் வர உள்ளதால், சுருளி அருவியைத் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு!