பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113ஆவது பிறந்தநாள் மற்றும் 58ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். அப்போது தேவர் நினைவிடத்தில் இருந்த பூசாரிகள் வழங்கிய விபூதியை ஸ்டாலின் தனது நெற்றியில் வைக்காமல் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்ட அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக் பசும்பொன் என்ற அமைப்பினர் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதில், தெய்வீக திருமகனார் தேவரின் நினைவிடத்தில் திருநீறு பிரசாதத்தை அவமதித்து தீண்டாமை கடைப்பிடித்த திமுக தலைவர் ஸ்டாலினை கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சுவரொட்டிகளை தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நேரு சிலை அருகில் என நகரின் முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர்.