தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் 95 வயது ஓ.பழனியம்மாள் நாச்சியார் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவும், தாயாரை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் எனத் திரளானோர் பெரியகுளம் தென்கரை இல்லத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் ஓ.பி.எஸ் தாயார் உடலுக்கு திமுக சார்பில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவினர் அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ்-யை சந்தித்து ஆறுதல் கூறினர். "தமிழகத்திற்கு நல்ல திருமகனைக் கொடுத்தவர் பழனியம்மாள். இந்த துக்கத்திலிருந்த அவர் மீள்வதற்கு ஆண்டவன் தான் அவருக்கு சக்தியைக் கொடுக்க வேண்டும்" என ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது. சிவ பக்தர்களைக் கொண்டு திருமறை மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்து ஓபிஎஸ் தாயாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அம்மையார் பழனியம்மாள் உடலுக்குச் சம்பிரதாய சடங்குகள் செய்த பின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணிக்குப் பெரியகுளம் நகராட்சிக்குச் சொந்தமான பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் தாயார் மறைவு திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அஞ்சலி வருகின்றனர்.