தேனி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்த நிலையில், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானார். இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகிவிட்டது. இந்நிலையில் அதிமுகவின் தொண்டர்கள் தன் பக்கம்தான் என நிரூபிக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார். நாளை(ஏப்.24) திருச்சி பொன்மலையில் மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாட்டிற்கு மக்களிடையே ஆதரவு திரட்டும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மக்கள் கூடும் இடங்களில் பிளெக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்களை வைத்திருந்தனர். அதில், எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை குனிந்து வணங்குவது போன்ற புகைப்படங்களை அச்சிட்டிருந்தனர்.
இந்தப் பேனர்களை அகற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக் கூடாது என்பதற்காக, நேற்று(ஏப்.22) பெரியகுளம் காவல்துறையினர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாநாட்டிற்காக வைத்திருந்த பேனர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்களை வைத்தே அகற்றினர். பின்னர் பேனர்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.