தேனி மாவட்டம் போடி அருகே உள்ள முதுவார்க்குடி, முட்டம், சென்ட்ரல் ஸ்டேஷன், டாப்ஸ்டேசன் ஆகிய மலைக்கிராமங்கள் கொட்டக்குடி ஊராட்சிக்குள்பட்டதாகும். குரங்கணியிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரமுள்ள இந்த மலைப்பகுதிக்கு பேருந்து போக்குவரத்து கிடையாது.
நூற்றாண்டுகளாக சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள், குதிரை, கழுதை, ஜீப் வாகனத்தில்தான் போக்குவரத்து மேற்கொண்டுவந்தனர்.
2018ஆம் ஆண்டு குரங்கணியில் ஏற்பட்ட கோர தீவிபத்தைக் காரணம் காட்டி டாப்ஸ்டேசன் மலைப்பாதைக்கு வாகனங்கள் செல்ல வனத் துறையினர் தடைவிதித்தனர்.
இதனால் அவசர கால மருத்துவத் தேவைக்காக கர்ப்பிணிகள், நோயாளிகளை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாய பொருள்களை சந்தைப்படுத்துவதற்கும், வேளாண் இடுபொருள்களை எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர்.
எனவே நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவந்த மலைப்பாதையை மீண்டும் திறந்துவிட வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அப்பகுதி விவசாயிகள், பழங்குடியினர் பலமுறை கோரிக்கைவைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வரும் 22ஆம் தேதிக்குள் குரங்கணி - டாப்ஸ்டேஷன் மலைப்பாதையை திறந்துவிடாவிட்டால் மாவட்ட வன அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்போவதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.