தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று(ஜன.13) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று வருவாய், ஊரக வளர்ச்சி, கால்நடை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியைச் சேர்ந்த சொக்கன் அலை, பட்டூர், குறவன் குழி, கரும்பாறை மற்றும் சூழ்ந்த காடு ஆகிய மலை கிராமங்களில் உள்ள 71 குடும்பங்களைச் சேர்ந்த 445 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 67 லட்சம் மதிப்பிலான இலவச பட்டா, பசுமை வீடுகள், தேன் வளர்ப்பு பெட்டி, தார்பாலின், ஆடு, கோழி குஞ்சுகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சோத்துப்பாறை அணைக்கு மேல்பகுதியில் உள்ள கண்ணக்கரை மலை கிராமத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித்திட்டத்தின் கீழ் ரூ.30லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையத்திற்கான கட்டடத்திற்கு பூமிபோஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் சொக்கன் அலை கிராமத்திற்கான சாலை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கண்ணக்கரை பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உபகரண பெட்டகங்களை வழங்கினார்.