தேனி: கம்பத்தில் உள்ள கம்பம் நகர்ப் பகுதிக்குள் கடந்த மாதம் 27 ஆம் தேதி அரி கொம்பன் என்ற காட்டு யானை திடீரென நகர்ப் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பொது மக்களை விரட்டி வாகனங்களைச் சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தலை தெறிக்க ஓடிச் சென்றனர். அப்போது யானை துரத்திய போது கம்பம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் யானை தாக்கி படுகாயம் அடைந்தார்.
காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ், மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் பால்ராஜ் யானை தாக்கியதில் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜை வனத்துறை அமைச்சர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை கேரளா பகுதியில் 10-க்கும் மேற்பட்டோரைக் கொன்று துரத்திய அரி கொம்பன், தமிழ்நாட்டில் தற்போது முதல் உயிர்ப் பலியை ஏற்படுத்தி இருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அரி கொம்பன் யானையைப் பிடிப்பதற்காக 3 கும்கி யானைகள் களமிறங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து வனத்துறையினரும் அரி கொம்பனின் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அரி கொம்பன் தற்போது அடர் வனப்பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ளதால், அதனைப் பிடிப்பதற்குச் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் யானை சமவெளிப் பகுதிக்குள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அப்போது உடனடியாக கும்கி உதவியுடன் அரி கொம்பனைப் பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். மேலும் தற்போது அரி கொம்பனைப் பிடிக்கும் வரை கம்பம் பகுதியில் 144 தடை நீடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரி கொம்பன் தாக்கி ஒருவர் படுகாயம் - வனத்துறை சார்பில் நிதியுதவி!