நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் முதற்கட்டமாக 4 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என எட்டுப் பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் முதல் முறையாக மாணவி ஒருவர் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி சிபிசிஐடி போலீசார் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.
சென்னை சவீதா மருத்துவக்கல்லூரி மாணவியான பிரியங்கா என்பவர், நீட் தேர்வில் ஆள்மாறட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவரது தாய் மைனாவதியுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல், இர்ஃபான் மற்றும் மாணவி பிரியங்கா ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிணை வழங்கியது. மேலும், மாணவர்களின் பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், டேவிஸ், முகம்மது சபி ஆகியோருக்கு மட்டும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சில நாட்களுக்குப் பின் பிணை வழங்கியது.
தற்போது , மதுரை மத்திய சிறையில் உள்ள மாணவி பிரியங்காவின் தாயார் மைனாவதியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்து, தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி, மைனாவதிக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து வரும் 19ஆம் தேதி, மீண்டும் ஆஜர்படுத்திட உத்தரவிட்டார்.