தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவரும், இவரது நண்பர் தர்மாவும், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பம்பு நிறுவனத்தில் பணியாற்றிவந்தனர்.
இதற்கிடையில் தர்மாவுக்கு ஒரு இளம்பெண்ணுடன் 2013ஆம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே தர்மாவிடம் அப்பெண்ணின் தொலைபேசி எண்ணைக் கேட்டு கண்ணன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து கண்ணனுடன் தர்மா, அவர்களின் நண்பர் பாலமுருகன் ஆகியோர் டாஸ்மாக் சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் மதுபோதையில் இருவரும் சேர்ந்து கண்ணனைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இது குறித்த வழக்கில் ஊத்துக்குளி காவல் துறையினர் தர்மா (30), பாலமுருகன் (32) ஆகிய இருவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கு இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 16) அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட தர்மா, பாலமுருகன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.