கரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வரும் நிலையில், வெளிநாட்டிற்கு மருத்துவம், பொறியியல், மென்பொருள் உள்ளிட்ட படிப்பு படிப்பதற்கு, வேலைக்குச் சென்றவர்கள் இந்தியாவுக்கு வர முடியாமல் அல்லல்படுகின்றனர். கோவிட்-19 தொற்றை தடுக்க வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிங்கப்பூர், மலேசியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மாணவர்கள் அங்கு இருக்க முடியாமலும், இந்தியாவிற்கு திரும்ப முடியாமலும் தவிக்கின்றனர்.
அந்தவகையில், உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அகதி போல் தவித்து வரும் நிலை அவரது பெற்றோரை கண்கலங்க வைத்துள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகநாதன் - தனலட்சுமி தம்பதி. ஜெகநாதன் இரும்பு அரம் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சசிக்குமார் (20) என்ற மகனும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவரது மகன் சசிக்குமார் கடந்த 2017ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றவர் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு நாளும் புதுப்புது நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்படுவதாக அந்த இளைஞர் கூறுகிறார். மேலும், தன்னை இந்தியா அழைத்து வர வேண்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், அவரை இந்தியா கொண்டு வருவதற்கு உதவி செய்திட வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர்.
இது குறித்து சசிக்குமாரின் பெற்றோர் கூறுகையில், "உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்ஹார்ட் நேஷனல் பல்கலைக்கழத்தில் (Uzhhord National university) எங்கள் மகன் சசிக்குமார் கடந்த மூன்றாண்டுகளாக மருத்துவ படிப்பு படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவரது உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் வயிற்றில் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு அறுவைசிகிச்சை செய்தனர். ஆனால், தொடர்ச்சியாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, வருவதால், சரிவர உணவருந்த முடியாமலும், அமர்வதற்கு கூட சிரமப்பட்டு வருகிறார்.
உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உடல் மெலிந்து காணப்படுகிறார். கையிலிருந்த பணத்தை வைத்து சிகிச்சை பெற்று வந்தார். மேற்கொண்டு போதிய நிதிவசதி இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருபவரை இந்தியா கொண்டு செல்லுங்கள் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். கரோனா நோய் பரவலால் வெளிநாட்டு பயணம் தடைபட்டிருக்கும் சூழலில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தங்கள் மகனை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீர் மல்க கூறினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளரிடம் சசிக்குமாரின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். மேலும், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் சென்றவர் உடல்நிலை பாதிப்படைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சூழல் அனைவரது மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா!