தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபாவளி. கூலித் தொழிலாளியான இவர், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றுள்ளார். இதனையடுத்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ள நிலையில், இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும், சங்கீதாவிற்கும் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதில், ஈஸ்வரனுக்கும் திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரது உறவு குறித்து தெரிந்ததும் தனது மனைவியையும், ஈஸ்வரனையும் பலமுறை தீபாவளி கண்டித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவும், ஈஸ்வரனும் ஊரை விட்டு ஓடிச் சென்று, மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், இந்த பிரச்னை குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் செல்லும்படி சங்கீதா, ஈஸ்வரன் மற்றும் தீபாவளி ஆகிய 3 பேருக்கும் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி, நேற்று (மே 4) காலை ஆண்டிபட்டிக்கு சங்கீதாவும், ஈஸ்வரனும் பேருந்தில் வந்து இறங்கி உள்ளனர். அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த தீபாவளி, இருவரும் இறங்குவதைக் கண்ட உடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரனையும், சங்கீதாவையும் சரமாரியாக குத்தி உள்ளார்.
தொடர்ந்து, இருவரும் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வாசலில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்ட காவல் துறையினர், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஈஸ்வரன் உயிரிழந்தார்.
அதேநேரம், காயம் அடைந்த சங்கீதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இருவரையும் தாக்கிய தீபாவளி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை - கர்ப்பிணி மனைவியுடன் கணவர் கைது!