தேனி: காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உலகம் முழுவதிலும் காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கலாசார சீரழிவு என்று பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து இந்தத் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் காதலர் தின எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கழுதைகளுக்கு ஆரம் மாற்றி திருமணம் நடத்தி வைத்தனர். தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சிவன் கோயில் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வைத் தொடர்ந்து காதலர் தினத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மூன்றெழுத்து மந்திரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் விளையாட்டுகள்!
பின்னர் காதலர் தின வாழ்த்து அட்டைகளைக் கழுதைக்கு உணவாக அளித்து, நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாழ்த்து அட்டைகளை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து எழுச்சி முன்னணி நிறுவனத் தலைவர் ரவி கூறுகையில், நம் நாட்டிற்கு அன்பும், காதலும் தேவைப்படுகிறது. உண்மையான காதலை நாங்கள் எதிர்க்கவில்லை, மாறாக காதல் என்ற போர்வையில் நடைபெறும் கலாசார சீரழிவுகள், பெற்றோர்களின் கனவுகளை அழிக்கும் செயலில் ஈடுபடுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்துக்களின் மனநிலையை பிரதிபலித்த பாஜக கல்யாணராமன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.