விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது தேனி மாவட்டம். இங்கு நெல், வாழை, மா, திராட்சை, மக்காச்சோளம், வெங்காயம், கத்திரிக்காய், தக்காளி, மிளகாய், வெண்டை, உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி நடைபெறுகின்றன. தற்போது கரோனா வைரஸ் நோய் தொற்றால் அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாயப் பணிகள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையாள்கள் யாரும் வராததால் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயராக உள்ள பச்சை மிளகாய் பறிக்கப்படாமல் செடியிலேயே பழுத்து காய்ந்துவிடுகின்றன.
![பழுத்து வீணாகும் பச்சைமிளகாய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-05-spl-lock-down-issue-chilli-product-damage-script-7204333_12042020192945_1204f_1586699985_294.jpg)
தேனி மாவட்டத்தில், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, புள்ளிமான்கோம்பை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் சாகுபடி நடைபெறுகிறது.
இதனை விதையாக நடவு செய்து, களையெடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் என 60 நாள்கள் பராமரிப்பிற்கு பிறகு காய்கள் அறுவடைக்கு தயாராகிவிடுகின்றன.
![செடியிலேயே வீணாகும் பச்சைமிளகாய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-05-spl-lock-down-issue-chilli-product-damage-script-7204333_12042020192945_1204f_1586699985_935.jpg)
அதன் பின்னர் களைச் செடிகளை வளர விடாமல் நன்றாக பராமரித்து வளர்த்தால், வாரத்திற்கு இரு முறை என எட்டு மாதம் முதல் ஒன்பது மாதம் வரையில் மிளகாய் அறுவடை செய்யலாம். குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டும் வகையில் உள்ளதால் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் வேலையாள்கள் யாரும் வராததால் மிளகாய் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்டு தற்போது பழமாக மாறிவிட்டது.
இதுகுறித்து பச்சை மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகையில்,
ஊரடங்கு உத்தரவில் விவசாயப் பணிகள், விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை ஏதும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. ஆனால் உழவுப் பணிக்கு வேலையாள்கள் வரத் தயங்குகிறார்கள். இதனால் காய்கள் பறிக்க முடியாமல் செடியிலேயே விடப்பட்டு தற்போது பழமாக மாறிவிட்டது. இருந்த போதிலும் வீட்டில் இருப்பவர்களை வைத்து காய்களை பறித்து சந்தைக்கு எடுத்துச் செல்வதற்குக்கூட வாடகை வாகனங்கள் கிடைப்பதில்லை. அதையும் தாண்டி சந்தைக்கு கொண்டு சென்றால் மொத்த வியாபாரிகள் உரிய விலை நிர்ணயப்பதில்லை.
இந்நிலையில் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரையில் தான் கேட்கிறார்கள். பொதுவாக விதை, மருந்து, உரம், ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் வரை செலவாகும். தற்போது ஊரடங்கு உத்தரவால் வாகனங்களின் வாடகை அதிகரித்து விட்டது. கிலோ ரூ.20 முதல் ரூ.25வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தால் தான் கட்டுபடியாகும். ஆனால் உரிய விலை கிடைக்காததால் நன்கு வளர்ந்து மகசூல் எடுக்க வேண்டிய சூழலில் மிளகாய் பறிக்காமல் விட்டு விட்டோம் என வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
மேலும் குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிற வியாபாரிகள் அதனை பொதுமக்களுக்கு வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுவாக இரண்டாவது மாதத்திலிருந்து காய்கள் எடுக்க ஆரம்பித்த பிறகு களைச்செடிகள் சேர விடாமல் நன்றாக பராமரித்து வந்தால் எட்டு முதல் ஒன்பது மாதம் வரையில் மிளகாய் பறிக்கலாம். ஆனால் ஊரடங்கு உத்தரவால் வேலையாள்கள் வராததால் பருவத்திற்கு வந்த செடிகள் களைச் செடிகளாக வளர்ந்து வருகிறது. இதனால் இந்த பயிர்கள் முழுவதும் உதவாமல் போய்விடும்” என்றார்.
இதனை அப்புறப்படுத்தி புதிதாகத்தான் சாகுபடி செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். ஊரடங்கு உத்தரவால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு காத்திட வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் பிங்க் நிலவில் ஜொலித்த உலக நாடுகள்!