நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், ஈரோட்டிலிருந்து வெள்ளைப்பூண்டு ஏற்றிக்கொண்டு கடந்த 19ஆம் தேதி, தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல வெள்ளைப்பூண்டு சந்தை இருக்கும் ஊரான வடுகபட்டிக்கு வந்து, பூண்டுகளை இறக்கிவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் லாரி ஓட்டுநருக்கு அண்மையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவருடன், தொடர்பில் இருந்தவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யும் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்தன.
அதன் ஒருபகுதியாக வடுகபட்டி வெள்ளைப்பூண்டு உரிமையாளர், தொழிலாளர்கள், வியாபாரிகள் என மொத்தம் 17 பேருக்கு நேற்று கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து வடுகபட்டி வெள்ளைப்பூண்டு மண்டிக்குச் செல்லும் சாலைகளும், சந்தையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளைப்பூண்டு வர்த்தகம் தடைபட்டு, சுமார் 10 கோடி ரூபாய் அளவிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.