மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் கோயில் திருவிழாவின் போது சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகாரறில் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தங்களது சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் தேனி மாவட்ட தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் இன்று (அக.15) மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க வந்திருந்தனர்.
அப்போது அவர்களை சந்திக்க மறுத்த ஆட்சியர் பல்லவி பல்தேவ், கோரிக்கை மனுவை தனது உதவியாளரிடம் அளிக்குமாறு கூறியுள்ளார். இதனால் அக்கட்சியினர், திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சாலையின் நடுவில் இருந்த பேரிகார்டுகளை இழுத்து சாலையின் குறுக்கே போட்டு போக்குவரத்தை தடை செய்தனர். தடையை மீறி செல்ல முயன்ற வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆட்சியரை சந்திப்பதற்கு அனுமதி பெற்றுத் தருவதாக அவர் கூறியும் போராட்டக்காரர்கள் மனுவை கிழித்தெறிந்து ஆட்சியரை சந்திக்க மறுத்தனர்.
அதன் பின்னர் ஆட்சியரை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் 108 ஆம்புலன்ஸ் உள்பட மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூவின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம்: காவல் துறையுடன் மோதலில் ஈடுபட்ட திமுக!