தேனி: தேனி மாவட்டம் தேவாரம், அதனைச் சுற்றியுள்ள மீனாட்சிபுரம், டி. மேட்டுப்பட்டி, டி. ரெங்கநாதபுரம் உள்ளிட்ட 30 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக சாக்கலூத்து மெட்டு சாலை திட்டம் உள்ளது. தேவாரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள இந்த சாலையை அமைப்பதன் மூலம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை, பூப்பாறை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இப்பகுதி மக்களால் சுலபமாக சென்றுவர இயலும். நாள்தோறும் ஏலத் தோட்டங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கலூத்து மெட்டு சாலையை அமைக்க அரசை வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவாசயிகள் சார்பில் சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்க வலியுறுத்தி இன்று (அக்டோபர் 24) அடையாள நடைபயண பேரணி நடைபெற்றது. தேவாரத்தில் இருந்து டி. மேட்டுப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சாக்கலூத்து மெட்டு அடிவாரம் வரையில் மேற்கொள்ள இருந்த இந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனால், தேவாரம் நகரில் மட்டும் சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு அங்கிருந்து சாக்கலூத்து மெட்டு அடிவாரத்திற்கு வாகனங்களில் சென்றனர். அடிவாரத்தில் உள்ள எல்லைப் பகுதியில் வனத்துறையினர் நடைபயண பேரணிக்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், தேவாரம் சாக்கலூத்து மெட்டு அமைக்கப்படுவதனால் கிடைக்கும் முக்கியத்துவம் குறித்தும் இந்த திட்டத்திற்கு அனுமதி மறுக்கும் வனத்துறையை கண்டித்தும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். தேவர் கூறுகையில், "மூன்று தலைமுறைகளாக தேவாரம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ள சாக்கலூத்து மெட்டு சாலை வெறும் தேர்தல் அறிக்கையாக மட்டுமே உள்ளது. திட்டத்தை செயல்படுத்த அலுவலர்கள், ஆட்சியாளர்கள் யாரும் முன்வருவதில்லை.
சாக்கலூத்து மெட்டு சாலை அமைவதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு மேம்படும். எனவே, இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அடையாள நடைபயணத்தை மேற்கொண்டோம்" என்றார்.
இதையும் படிங்க: மனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவனுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க. ஸ்டாலின்