தேனி: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பெரியகுளம் தென்கரை பெருமாள் கோயில் தெரு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாக சரவெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அம்மாவின் அடுத்த வாரிசு எடப்பாடி பழனிசாமி எனவும், கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் எனவும், திமுகவை அழிக்க வந்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும் வாழ்த்தி கோஷமிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்த தீர்ப்பையொட்டி அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி வசமான அதிமுக.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி