'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பின் கீழ் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் இரண்டு நாள் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். முதல் நாளான நேற்று ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 10 இடங்களில் திறந்த வெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
இதற்கான ஏற்பாடுகளை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையிலான திமுகவினர் செய்திருந்தனர். கம்பம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் படு அமர்க்களமாக வரவேற்பு அளித்தனர்.
சின்னமனூர் - பழைய பாளையம் சாலையில் ஊர்வலமாக வந்த உதயநிதி ஸ்டாலினை கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மாட்டாட்டம், குத்தாட்டம் என வழிநெடுகிலும் குதூகலமாக திமுகவினர் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து நிறைவாக கம்பம் நகரில் பேச வந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக டோக்கன் கொடுத்து பெண்கள் அழைத்து வரப்பட்டனர். கம்பம் நகர் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் அதிகமான பெண்களை அழைத்து வந்த திமுகவினர் அவர்களுக்கு பணம் ரூபாய் 100 வழங்குவதற்காக டோக்கன் விநியோகித்தனர்.
அதனை பெற்றுக் கொண்டு குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காத்திருந்த பெண்கள் உதயநிதி ஸ்டாலினின் வருகை தாமதம் ஆனதால் சாலையிலே அமர்ந்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஒருகட்டத்தில் உதயநிதியின் வருகை தாமதம் ஆனதால் கலைப்படைந்த பெண்கள் டோக்கனுடன் கூட்டத்தில் இருந்து கலையத் தொடங்கினர். அவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் 10 நிமிடங்களில் வந்து விடுவார் என்று கூறியே மணிக்கணக்கில் காக்க வைத்தனர். இறுதியாக இரவு 8 மணிக்கு மேல் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் உள்ள அரசமரம் பகுதியில் திறந்த வேனில் பேசிவிட்டு அங்கிருந்து திரும்பினார்.