தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் லோகிராஜன் தலைமையில் நேற்று (அக். 14) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு துணைத் தலைவர் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள், ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 18 கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கடந்த மாத வரவு - செலவினங்கள் வாசிக்கப்பட்டு, மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. பின்னர் ஏத்தக்கோவில் பகுதிக்கு கடந்த 10 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்றும், திம்மரச நாயக்கனூர் அருகே உள்ள கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து ஏத்தக்கோவில் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த வார்டு உறுப்பினர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த தலைவர், விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஒன்றிய பொது நிதி தற்போது வரை வரவில்லை என்றும், வந்தவுடன் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஒன்றிய கவுன்சில் பகுதிகளுக்கும் சமமாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத திமுக, காங்கிரஸ், அமமுக கவுன்சிலர்கள், “மத்திய அரசின் 15ஆம் நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு விடுவித்தும், அதை மாநில அரசு வழங்க மறுக்கிறது.
இதனால் ஊராட்சி ஒன்றியங்களிலும், கிராம ஊராட்சிகளிலும் எந்த வளர்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெறவில்லை. 15ஆவது நிதிக்குழு மானியத்தைப் பெறுவதற்கு ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்கிறோம்" எனக் கூறி வெளியேறினர்.