தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் விலக்கு பேருந்து நிறுத்தத்தை காணவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதைப் பற்றி சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐயப்பன் கூறுகையில், ''அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் விலக்கு பகுதியினைச் சுற்றி, கிராமப்புறம் நிறைந்திருக்கின்றது. பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் என அப்பகுதி மக்களின் வசதிக்காக பேருந்தில் செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இதையும் படிங்க: நூதன முறையில் ரூ.90 லட்சம் பறிமுதல்.. 6 பேரை அதிரடியாக கைது செய்த காவலருக்கு குவியும் பாராட்டு!
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் 'எங்கே இருக்கிறது?' என்று தேடி வருகின்றனர். கிணற்றைக் காணவில்லை என்ற வடிவேலு பட காமெடி பாணியில், பேருந்து நிறுத்தம் தெரியாத அளவிற்கு, தனியார் உணவகமாக மாறி இருக்கிறது. தனிப்பட்ட நபர்கள் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து, உணவகமாக மாற்றி, விளம்பரப் பலகையால் பேருந்து நிலையத்தின் சுவடே தெரியாத அளவிற்கு மாற்றி அமைத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், பயணிகள் நிழற்குடை பின்புறம், காலி மது பாட்டில்கள் கிடக்கின்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்து நிறுத்தம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் முன்னும் பின்னும் பேருந்தை நிறுத்துவதால் பயணிகள், பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
எனவே, அந்தப் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் நிழற்குடை அமைத்து மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக சிவசேனா கட்சி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இந்த கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்''எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கீழடி 9ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 பொருட்கள் கண்டெடுப்பு - தொல்லியல் துறை தகவல்!